வாழைப்பூ பொரியல்

5 கருத்துகள்


வாழைப்பூ பொரியல்

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1 (சிறியது)
வெங்காயம் - 1
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும். இப்படி செய்வதால் வாழைப்பூ கருக்காமல் இருக்கும். பின்னர் வடிகட்டி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கடலைபருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


3. அதில் மஞ்சள் தூள்,  உப்பு சேர்த்து வதக்கவும்...அத்துடன் வாழைப்பூ
  சேர்க்கவும்.


4. பின்னர் மிளகு தூள்,  சீரக தூள் சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் நீர் விட்டு வேக  வைக்கவும்.



5.வாழைப்பூ நன்கு வெந்ததும் தேங்காய் துருவல் தூவி பிரட்டி இறக்கவும்.


சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.


அனைத்து குழம்பு வகைகளுக்கும் ஏற்ற பக்க உணவு...


சுகன்யாவும் சுடிதாரும்

2 கருத்துகள்


சுகன்யாவும் சுடிதாரும்

தலைப்பு பார்த்ததுமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இது மொக்கை பதிவு தான்னு.

ஆமாங்க. சமையல் குறிப்பா போடலாம்ன்னு பார்த்தா என் உன்னோட மொக்கை பதிவுகள் முடிஞ்சுடுச்சான்னு ரங்ஸ் கூட கிண்டல் பண்றார்.

சரி அவரோட இந்த ஆசையாவது நிறைவேத்துவோம்ன்னு நம்ம கல்லூரி கதையை எழுதுறேன்.

ப்ளஸ் 1 படிக்கும் பொழுது அறிமுகமான தோழி தான் சுகன்யா. நான் "ஏ" பிரிவு. சுகன்யா "சி" பிரிவு.

ஆனால் ஓரளவு பழக்கம் உண்டு. வெகுளியாக பேசுவாள்.

கல்லூரி சேர்ந்ததும் எனது வகுப்பறையில்  சுகன்யாவை பார்த்து ஒரே சந்தோஷம். அவள் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தாள்.

சென்டிமென்ட்க்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பெல்லாம் இல்லை.
சுகன்யா செம சென்டிமென்ட் பைத்தியம்.

எல்லாத்துக்கும் ஒரு காரணம் கண்டுபிடித்து விடுவாள். எப்பொழுதாவது மேமிடம் மாட்டினால் கூட அதற்கு ஒரு காரணம் ஜோடித்து விடுவாள்.

ஒரு முறை செகண்ட் செமஸ்டரின் பொழுது ஒரு மஞ்சள் வண்ண சுரிதார் அணிந்து வந்தாள்.

அன்று எக்ஸாம் சுலபமாக அமைந்து விட மெனக்கெட்டு அந்த சுரிதாரை துவைத்து மறுநாள் பரீட்சைக்கும் அணிந்து வந்தாள்.

எங்களின் கேலி எல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை.

அவளின் ராசி அன்றும் சுலபமாக அமைந்து விட்டது. தொடர்ந்து வந்த அனைத்து எக்ஸாமுக்கும் அதே உடை தான்.

இதனை பசங்க கூட கண்டுபிடித்து கலாய்த்த போதும் அசரவில்லை.

இந்த கொடுமை ப்ராக்டிகளிலும் தொடர்ந்தது. நானும் அவளும் ஒரே பேட்சில் வருவதால் எனது ட்ரெஸ் சென்டிமென்ட் தான் இவ்வளவு ஈசியா வந்துருக்கு. அதை புரிஞ்சுக்காம கிண்டல் பண்றியேன்னு என்கிட்டே கோவம் வேற.

ஏதோ அந்த வருடம் நல்லபடியாக எல்லா எக்ஸாமும் முடித்து விட்டேன் என்று பூரிப்பில் இருந்தாள்.

ஞாபகமாக அந்த சுடிதாரை துவைத்து பத்திரப்படுத்தி விட்டதாக சொன்னாள் அடுத்த செமெஸ்டர் எக்ஸாமிர்க்காக.

எனக்கு கூட எனது உடைகளில் ஒரு ப்ளாக் கலர் சுடிதாரை ரெகமண்ட் செய்தாள்.

இந்த ட்ரெஸ் போட்ட அன்று நீ ரொம்ப நல்லா எழுதினதா சொன்ன.

அதனால இதை தனியாக எடுத்து வை அடுத்த எக்ஸாம் அப்போ போடலாம்னு சொன்னா.

நான் உடனே உனக்கு ஆள் சேர்க்குறியா உன்னை கலாய்க்குறது பத்தாதுன்னு என்னையும் மாட்டி வைக்க பார்க்குறியான்னு கேட்டேன்.

அதற்கு எல்லாம் அசரவில்லை. அவங்க கலாய்ச்சா கலாய்க்கட்டும். நமக்கு இதுனால தான் ஈசியாக வருது. என் பேச்சை கேளுன்னு தினமும் சொல்லி நானும் ஒரு வழியா சரி ப்ராக்டிகலுக்கு மட்டும் போட்டுக்குறேன்னு  அந்த ட்ரெஸ்ஸ தனியாக எடுத்து வச்சுட்டேன்.

அடுத்த செமெஸ்டர் எக்ஸாமும் வந்தது.

சுகன்யா வழக்கம் போல மஞ்சள் சுடிதார் அணிந்து ஆஜராயிட்டா.

முதல் எக்ஸாம் செம டஃப். எல்லாருக்கும் தானே கஷ்டம்னு சொல்றாங்கன்னு மனசை தேத்திகிட்டு மறுநாளும் அதே ட்ரஸில் வந்தாள்.

தொடர்ந்து வந்த அனைத்து எக்ஸாமும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது.

சுகன்யா ரொம்ப அப்செட் ஆயிட்டா. எல்லாரும் அவளை ஒட்டி எடுத்துட்டாங்க. ஹாஸ்டல் கேர்ள்ஸ் வேற இதை எல்லா டிபார்ட்மெண்ட்லயும் சொல்லி அவளை பாப்புலர் ஆகிட்டாங்க.

ஒரு வழியா ப்ராக்டிகல்சும் வந்தது. என்னை வேற முதல் நாளே அந்த ப்ளாக் ட்ரெஸ் மறந்துடாதேன்னு சொல்லிட்டு போயிட்டா.

எனக்கு இதெல்லாம் நம்புறதா வேண்டாமான்னு ஒரே குழப்பம். எங்க பேட்சில் மூன்று பேர் தான் பொண்ணுங்க. மத்தவங்க எல்லாம் பசங்க தான்.

அதனால் என்னோட மற்ற தோழிகளுக்கு தான் தெரியாதேன்னு எல்லாம் யோசனை பண்ணி அந்த ப்ளாக் ட்ரெஸ் போட்டுக்கிட்டு லேப்க்கு போயாச்சு.

சுகன்யாவோட நம்பிக்கைப்படி எனக்கு கொஞ்சம் ஈசியாக தான் இருந்துச்சு. எனக்கு அடுத்த டேபிள் தான் அவளுடையது. மேடம்க்கு சந்தோஷம் தாங்கலை. ட்ரெஸ்ஸ தொட்டு தொட்டு வேற காண்பிச்சா.

நானும் இவ்வளவு நாள் இவளை கிண்டல் பண்ணிட்டேனே கரெக்டா நமக்கு எந்த ட்ரஸ் போட்டா சக்சஸ் ஆகுதுன்னு ஐடியா குடுத்தான்னு வேற மிதப்பில் இருந்தேன்.

மேமை கூப்பிட்டு அவுட்புட் காண்பிக்க போற நேரத்துல ஒரு ஒயரை சரியாக கனெக்ட் பண்ணாம ஆன் பண்ணினதுல செம ஷாக் அடிச்சது.
எனக்கு பயத்துல குப்ன்னு வேர்த்து போய் உட்கார்ந்துட்டேன்.

உடம்பு வேற பயத்துல நடுங்குது. மேம் வந்து அவுட்புட் காண்பின்னு சொல்றாங்க எனக்கு கையெல்லாம் நடுங்குது.

அவங்க என்ன ஆச்சு உனக்குன்னு கேட்டதுக்கு ஷாக் அடிச்சுடுச்சுன்னு சொன்னேன். உடனே அவங்க எப்படி அடிக்கும் ஷூ போட்டுருக்க தானேன்னு பார்க்க அப்போ தான் எனக்கே ஷூ போட்டும் ஏன் ஷாக் அடிச்சுதுன்னு யோசிச்சேன்.

வேர்க்கும்ன்னு நாங்க எப்பவுமே ஷூவில் பட்டும் படாமலும் தான் எப்போவும் காலை வச்சுக்கிட்டு லேபில் உட்காருவது வழக்கம்.

அதற்கு வேற மேம் ஒரு டோஸ் விட்டாங்க.உடனே சரி நீ தானே உங்க பேட்சில் முதல் ஆள். உடனே வைவாக்கு வான்னு சொல்லிட்டு போயிட்டாங்க.

அங்க ஒரு அரை மணி நேரம் கேள்வி மேல கேள்வியா கேட்டாங்க. சும்மா இருந்தா கூட ஏதோ சொல்லிருப்பேன். இந்த ஷாக் அடிச்சதுல தெரிஞ்ச எல்லாமும் மறந்து போயி உளறி அடிச்சுட்டு வந்துட்டேன்.

எல்லாம் முடிஞ்சு வெளில வந்தா சுகன்யா ஆவலா என்கிட்டே வந்து என்ன நான் சொன்ன மாதிரி ப்ளாக் ட்ரெஸ் போட்டதும் எல்லாம் சூப்பரா வந்துச்சா.

மேம் கூட உன்னோட ப்ளேஸ்ல ரொம்ப நேரம் நின்னு பேசினாங்களே எனக்கு அப்போவே தெரியும் எப்படி என் ட்ரெஸ் சென்டிமென்ட்னு கேட்டாள்.

அவ்வளவு தான் திட்டி தீர்த்துட்டேன். எனக்கு துணைக்கு இன்னொரு பொண்ணு வேற சேர்ந்துகிட்டா. நம்ம நல்லதுக்கு சேருகிறோமோ இல்லையோ ஒருத்தவங்கள திட்டுறது கலாய்க்கிரதுன்னா சேர்ந்துக்குவோம் தானே அந்த மாதிரி தான்.

நாங்க போட்ட போடுல சுகன்யா யாருக்கும் ட்ரெஸ் சென்டிமென்ட் சொல்றதும் இல்லை. தானும் போடுறதும் இல்லை.

ஆனால் இன்னும் மஞ்சள் வண்ண சுடிதாரை பார்த்தால் என் தோழி தான் நினைவுக்கு வருவாள்.

என்னோட கல்லூரி கால மொக்கையை படித்ததற்கு ரொம்ப நன்றி.

வந்தற்கு ஜில்லுன்னு ஒரு ஜிகர்தண்டா சாப்டுட்டு போங்க....

மீண்டும் சந்திப்போம்.







ஸ்பைசி சிக்கன் மக்ரோனி

2 கருத்துகள்


ஸ்பைசி சிக்கன் மக்ரோனி 

தேவையான பொருட்கள் :

மக்ரோனி  - 1 பாக்கெட் 
போன்லெஸ் சிக்கன் துண்டுகள் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய்  - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 2 துண்டு 
கிராம்பு  - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிதழை, புதினா   - 1/2 கப்
முந்திரி - 6

செய்முறை :

1. மக்ரோனியை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மெல்லியதாகவும்  பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.

2. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி கோழி துண்டுகள், தக்காளி போன்றவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


4. தக்காளி குழைந்ததும் தூள் வகைகள், தயிர் சேர்த்து கோழியை வேக விடவும்.


5. பின்னர் உடைத்த முந்திரி, மல்லிதழை, புதினா சேர்த்து பிரட்டி விட்டு 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.


6. கோழி வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் மசாலாவில் மக்ரோனியை
 சேர்க்கவும். 

7. 5 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

ஸ்பைசி சிக்கன் மக்ரோனி ரெடி.



* கோழி பிடிக்காதவர்கள் கேரட், குடைமிளகாய் போன்ற காய்கறிகள் சேர்த்து செய்யலாம்.


* கடைசியாக ஒரு முட்டையை கொத்தி விட்டு மக்ரோனியில் சேர்க்கலாம்.

காடை ரோஸ்ட்

3 கருத்துகள்


காடை ரோஸ்ட்  

தேவையான பொருட்கள் :

காடை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்பால்  - 1/2 கப் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்  - தலா 1

செய்முறை : 

1. காடையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2. சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை, கிராம்பு,  ஏலக்காய் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.பச்சை வாசம் போனதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.


4. காடையை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு தூள் வகைகள், தயிர் சேர்க்கவும்.


5. தேங்காய்பால் சேர்த்து காடையை 10 நிமிடம் வேக விடவும்..


6. காடை வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா நன்கு கெட்டியாக வரும் பொழுது அடுப்பை அணைக்கவும். மல்லிதழை தூவி பரிமாறவும்.


காடை ரோஸ்ட் தயார்.

நெய்சோறு, பரோட்டா இவற்றுடன் சாப்பிட பொருத்தமான சைட்டிஷ். 

விரும்பினால் 10 முந்திரியை சேர்த்து அரைத்து ரோஸ்டில் சேர்க்கலாம். இது நன்கு ரிச் டேஸ்டுடன் இருக்கும்.

மீன் பொரியல்

2 கருத்துகள்


மீன் பொரியல் 

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 + 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 + 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை:

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 3 முறை நீர் விட்டு அலசி வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் தூள் வகைகள், உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கலந்து வைக்கவும்.

3. பின்னர் மீனை அந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிசிறி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.



4. பானில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் சிவரும் படி நன்கு பொறித்து எடுக்கவும்.



சுவையான மீன் பொரியல் தயார்.



* நான் இதில் கொடுவா மீன் பயன்படுத்தி உள்ளேன். எல்லா வகை மீன்களும் பயன்படுத்தலாம்.

* விரும்பினால் 1 ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து மீனில் பிசிறி வைக்கலாம். அதுவும் நன்றாக இருக்கும்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes