அம்மம்மாவும், கோலா மீனும்



அம்மம்மாவும், கோலா மீனும் 

என்னடா தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்கிறிங்களா எப்படியும் பதிவு முடியறதுக்குள்ள  உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சுடும்.

இப்போ எங்க அம்மம்மாவை பத்தி கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

எங்க அம்மாவை பெற்றவர்களை தான் அம்மம்மா, அப்பா என்று அழைப்போம்.

எனக்கு அம்மம்மாவை விட அப்பா தான் ரொம்ப நெருக்கம். எந்த விஷயம் என்றாலும் அப்பாவிடம் தான் பகிர்ந்து கொள்வது வழக்கம் இன்று வரை அப்படியே தொடர்கிறது.

அம்மம்மா என் மேல் மிகுந்த அன்பாக இருப்பார்கள். ஒரே பேத்தி வேறு. சிறு வயதில் எல்லாம் நான் தப்பே செய்தாலும் அம்மம்மா எப்பொழுதும் எனக்கு சப்போர்ட் தான் செய்வார்கள்.

அது போல் நான் பள்ளிக்கு மட்டம் போடும் போதெல்லாம் தயங்காமல் ஒரு நாள் தானே லீவ் போடட்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் அம்மாவும், அப்பாவும் விடாமல் பள்ளிக்கு செல்ல வேனில் ஏற்றி விட்டு தான் விடுவார்கள். பள்ளிக்கு மட்டம் போட்டால் மட்டும் அப்பாவிற்கு கோபம் வந்து விடும்.

இப்பொழுது யோசித்து பார்த்தால் அப்படி எல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்ததால் தானே நம்மால் படிக்க முடிந்தது. என் வயது பெண்கள் எல்லாம் பள்ளி படிப்பினை முடித்து திருமணம் ஆகி செல்கையில் என்னை முதுகலை வரை படிக்க தூண்டியது என் அப்பா தான். அவர்கள் குடுத்த ஊக்கம் தான் இன்று வரை தொடர்கிறது.

அப்பாவிற்கு மீன் என்றால் ரொம்ப இஷ்டம். என் அம்மம்மா வீட்டில் தான் நான் பத்தாவது முடிக்கும் வரை இருந்தேன். அது கடற்கரையை ஒட்டிய கிராமம் என்பதால் வாரத்தில் 3 அல்லது 4 நாள் கண்டிப்பாக மீன் இருக்கும். எனக்கு தான் சிறு வயதில் மீன் பிடிக்காது.

அதிலும் கோலா மீன் சீசன் தொடங்கி விட்டால் தினம் மீன் குழம்பு, மீன் வறுவல் தான்.

கடற்கரை பகுதி என்பதால் உயிருள்ள கோலா மீன் தான் வாங்குவார்கள்.

மறுநாள் வரும் கோலா மீன்களை வாங்க மாட்டார்கள். பிடித்தவுடனே இரவு நேரத்தில் பெண்கள் விற்க வருகையில் தான் வாங்குவார்கள்.

அப்பொழுது எல்லாம் மீன் விற்கும் பெண்கள் தெருவில் வந்து வாடிக்கையாக எப்பொழுதும் குடுக்கும் வீடுகளுக்கு அவர்களாகவே வந்து மீன் விற்று செல்வது வழக்கம்.

என் அம்மா, அப்பா இருவரும் கோலா மீன் சீசனில் இரவு நேரத்தில் கோலா மீன் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.

என் அம்மா அம்மியில் மசாலா எல்லாம் அரைத்து ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். என் சித்தி கூட மீனே வரவில்லை அதற்குள் மசாலா எல்லாம் ரெடி செய்து விட்டாயா என்று கேலி செய்வார்கள்.

மீன் வந்ததும் குழம்பு வைத்து மீன் பொரியல் செய்து சுட சுட சாப்பாடு தான். இது பொதுவாக அந்த ஊர்களில் நிறைய வீடுகளில் உண்டு.

ஒரு முறை இந்த கோலா மீன் சீசனில் 2, 3 நாட்களாக நல்ல மீன் வரவில்லை. இன்று கண்டிப்பாக விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி விடு என்று அப்பா கூறி விட்டு கடைத்தெருவிற்கு சென்று விட்டார்கள்.

அன்று மாலை திடீரென்று என் சித்தி பையனுக்கு காய்ச்சல். அதனால் டாக்டரிடம் செல்ல உடனே முடிவெடுத்து அம்மாவும், சித்தியும் தம்பியை அழைத்து கொண்டு கிளம்பி விட்டார்கள். கூடவே நானும் சென்று விட்டேன்.

கிளம்பும் சமயம் மீன் கொண்டு வரும் பெண் வந்ததால் மீனை வாங்கி அம்மம்மாவிடம் தந்து விட்டு நாங்கள் வர நேரம் ஆனால் நீ சமைத்து விடும்மா என்று சொல்லி விட்டு சென்றார்கள்.

மசாலா எல்லாம் அம்மியில் அரைத்து சிரமப்படாதே  குழம்பு பொடியே உபயோகித்து கொள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

எங்கள் அப்பாவே அம்மம்மா சமையலை புகழ்ந்து தான் மற்றவர்களிடம் சொல்வார்கள்.

பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

2 கருத்துகள்:

  1. உங்கள் மலரும் நினைவுகளை நான் படிக்கும் போது எனக்கு நேரம் போவதே தெரிய வில்லை. அவ்வளவு அழகாக எழுதி இருக்கீங்க ஷமீ.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு ரொம்ப நன்றி மா.

    உங்கள் பாராட்டை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி.

    அடுத்த பகுதி ஒன்றிரண்டு தினங்களில் பதிவிடுறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes