அம்மம்மாவும், கோலா மீனும் - 2

4 கருத்துகள்

அம்மம்மாவும், கோலா மீனும் - 2


முதல் பகுதியை காண :

அம்மம்மாவும், கோலா மீனும் - 1


பொதுவாகவே எங்கள் வீட்டில் சமையல் வேலை எல்லாம் அம்மா, சித்தி தான் பார்ப்பார்கள். பாத்திரம் கழுவ, துணி துவைக்க ஆள் உண்டு.

அம்மம்மா மீன், கோழி எல்லாம் சுத்தம் செய்து தருவது இஞ்சி பூண்டு உரிப்பது போன்ற வேலை மட்டுமே செய்வார்கள். அதான் அவங்க டிபார்ட்மெண்ட். என்றாவது ஒரு நாள் அம்மா, சித்தி இருவருமே வீட்டில் இல்லை என்றால் தான் அம்மம்மா சமைப்பார்கள்.

கொஞ்சம் மெதுவாக தான் செய்வார்கள். ஆனால் நல்ல சுவையாக இருக்கும்.
நெய்சோறு, பணியாரம் சுடுவது எல்லாம் அவர்கள் தான் செய்வார்கள்.
இன்னும் என் அம்மம்மா போல் எங்களுக்கு நெய்சோறு நன்றாக அமையாது.

அம்மம்மாவும் மீனை நன்றாக கழுவி குழம்பு வைத்து, பொரியல் எல்லாம் செய்து வைத்து விட்டார்கள்.

அப்பாவிற்கும் வைத்து கொடுத்து அவர்களும் சாப்பிட்டு விட்டார்கள்.

நாங்கள் டாக்டரை எல்லாம் பார்த்து விட்டு 9 மணி போல் தான் வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் என் அம்மா அம்மம்மாவிடம் சென்று என்னம்மா அத்தா சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்தார்.

உடனே அம்மம்மா என்னவோ தெரியவில்லை அத்தா மீன் வேண்டும் என்று ஆசையாக கேட்டு விட்டு சரியாகவே சாப்பிடவில்லை என்று
கூ றினார்கள்.

என் அம்மாவும் அப்பாவிடம் போய் ஏன் சரியாக சாப்பிடவில்லை மீன் நன்றாக இல்லையா என கேட்க அப்பா உடனே புது மீனாக தான் இருந்தது ஆனால் இன்று என்னவோ ஒரு புது மாதிரி வாசனையாக இருந்தது. என்னால் அதனை சாப்பிடவே முடியவில்லை.

பொரித்த மீன் என் அப்பா எப்பொழுதும் சாப்பிட மாட்டார்கள். குழம்பு மீன் மட்டும் தான் சாப்பிடுவார்கள்.

அப்படி என்ன வாசனை இந்த மீனில் என்று குழம்பு சட்டியில் பார்த்தால் திறந்துமே ஒரு வித எசென்ஸ் வாசனை வந்தது.

அப்புறம் சாப்பிடும் பொழுது மீனை பார்த்தால் அதே வாசனை. குழம்பு கேட்கவே வேண்டாம் ஒரே இனிப்பு வேறு.

என் சித்தி தான் கடைசியில் கண்டுபிடித்தார்கள். அம்மா நீ எந்த டப்பாவில் உள்ள மசாலாவை குழம்பு கரைக்க எடுத்தாய் என.

உடனே என் அம்மம்மா இது தெரியாதா மேலே உள்ள சில்வர் டப்பா தான் என காட்டினார்கள்.

குழம்பு தூள் டப்பா அடுத்த அடுக்கில் இருக்கு. நீ கரைத்தது காம்ப்ளான் என்று சொன்னார்கள்.

பிறகு தான் தெரிந்தது அம்மம்மா குழம்பு வைக்கும் சமயம் கரண்ட் கட் ஆனதில் ஏற்பட்ட குழப்பம் தான் இது.

பொரித்த மீன் காலியாகி விட்டது. குழம்பு தான் யாருமே தொடவில்லை.

மறுநாள் பூனைக்கு வைத்தால் அந்த வாசத்திற்கு அது கூட சாப்பிடாமல் ஓடி விட்டது.

அப்புறம் என்ன இதனை நினைத்து நினைத்து சிரித்து கொண்டே இருந்தோம்.

ஒரு வழியாக காம்ப்ளான் மீன் குழம்பு என் உறவினர்ள் வரை பரவி விட்டது.

இப்பொழுது தலைப்புக்கான காரணம் எல்லோருக்கும் புரிந்திருக்குமே ..

இரண்டு பதிவுகளையும் பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி.

என் அம்மம்மா, அப்பா இருவரும் இப்பொழுது உடம்பு அவ்வளவாக சுகமில்லாமல் தான் இருக்கிறார்கள். வயதானால் தான் எல்லா நோய்களும் சேர்ந்து கொள்கிறதே.

அவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியில்லாமல் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.




அம்மம்மாவும், கோலா மீனும்

2 கருத்துகள்



அம்மம்மாவும், கோலா மீனும் 

என்னடா தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு யோசிக்கிறிங்களா எப்படியும் பதிவு முடியறதுக்குள்ள  உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சுடும்.

இப்போ எங்க அம்மம்மாவை பத்தி கொஞ்சம் சொல்லிக்கிறேன்.

எங்க அம்மாவை பெற்றவர்களை தான் அம்மம்மா, அப்பா என்று அழைப்போம்.

எனக்கு அம்மம்மாவை விட அப்பா தான் ரொம்ப நெருக்கம். எந்த விஷயம் என்றாலும் அப்பாவிடம் தான் பகிர்ந்து கொள்வது வழக்கம் இன்று வரை அப்படியே தொடர்கிறது.

அம்மம்மா என் மேல் மிகுந்த அன்பாக இருப்பார்கள். ஒரே பேத்தி வேறு. சிறு வயதில் எல்லாம் நான் தப்பே செய்தாலும் அம்மம்மா எப்பொழுதும் எனக்கு சப்போர்ட் தான் செய்வார்கள்.

அது போல் நான் பள்ளிக்கு மட்டம் போடும் போதெல்லாம் தயங்காமல் ஒரு நாள் தானே லீவ் போடட்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் அம்மாவும், அப்பாவும் விடாமல் பள்ளிக்கு செல்ல வேனில் ஏற்றி விட்டு தான் விடுவார்கள். பள்ளிக்கு மட்டம் போட்டால் மட்டும் அப்பாவிற்கு கோபம் வந்து விடும்.

இப்பொழுது யோசித்து பார்த்தால் அப்படி எல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்ததால் தானே நம்மால் படிக்க முடிந்தது. என் வயது பெண்கள் எல்லாம் பள்ளி படிப்பினை முடித்து திருமணம் ஆகி செல்கையில் என்னை முதுகலை வரை படிக்க தூண்டியது என் அப்பா தான். அவர்கள் குடுத்த ஊக்கம் தான் இன்று வரை தொடர்கிறது.

அப்பாவிற்கு மீன் என்றால் ரொம்ப இஷ்டம். என் அம்மம்மா வீட்டில் தான் நான் பத்தாவது முடிக்கும் வரை இருந்தேன். அது கடற்கரையை ஒட்டிய கிராமம் என்பதால் வாரத்தில் 3 அல்லது 4 நாள் கண்டிப்பாக மீன் இருக்கும். எனக்கு தான் சிறு வயதில் மீன் பிடிக்காது.

அதிலும் கோலா மீன் சீசன் தொடங்கி விட்டால் தினம் மீன் குழம்பு, மீன் வறுவல் தான்.

கடற்கரை பகுதி என்பதால் உயிருள்ள கோலா மீன் தான் வாங்குவார்கள்.

மறுநாள் வரும் கோலா மீன்களை வாங்க மாட்டார்கள். பிடித்தவுடனே இரவு நேரத்தில் பெண்கள் விற்க வருகையில் தான் வாங்குவார்கள்.

அப்பொழுது எல்லாம் மீன் விற்கும் பெண்கள் தெருவில் வந்து வாடிக்கையாக எப்பொழுதும் குடுக்கும் வீடுகளுக்கு அவர்களாகவே வந்து மீன் விற்று செல்வது வழக்கம்.

என் அம்மா, அப்பா இருவரும் கோலா மீன் சீசனில் இரவு நேரத்தில் கோலா மீன் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.

என் அம்மா அம்மியில் மசாலா எல்லாம் அரைத்து ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். என் சித்தி கூட மீனே வரவில்லை அதற்குள் மசாலா எல்லாம் ரெடி செய்து விட்டாயா என்று கேலி செய்வார்கள்.

மீன் வந்ததும் குழம்பு வைத்து மீன் பொரியல் செய்து சுட சுட சாப்பாடு தான். இது பொதுவாக அந்த ஊர்களில் நிறைய வீடுகளில் உண்டு.

ஒரு முறை இந்த கோலா மீன் சீசனில் 2, 3 நாட்களாக நல்ல மீன் வரவில்லை. இன்று கண்டிப்பாக விலை அதிகமாக இருந்தாலும் வாங்கி விடு என்று அப்பா கூறி விட்டு கடைத்தெருவிற்கு சென்று விட்டார்கள்.

அன்று மாலை திடீரென்று என் சித்தி பையனுக்கு காய்ச்சல். அதனால் டாக்டரிடம் செல்ல உடனே முடிவெடுத்து அம்மாவும், சித்தியும் தம்பியை அழைத்து கொண்டு கிளம்பி விட்டார்கள். கூடவே நானும் சென்று விட்டேன்.

கிளம்பும் சமயம் மீன் கொண்டு வரும் பெண் வந்ததால் மீனை வாங்கி அம்மம்மாவிடம் தந்து விட்டு நாங்கள் வர நேரம் ஆனால் நீ சமைத்து விடும்மா என்று சொல்லி விட்டு சென்றார்கள்.

மசாலா எல்லாம் அம்மியில் அரைத்து சிரமப்படாதே  குழம்பு பொடியே உபயோகித்து கொள் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

எங்கள் அப்பாவே அம்மம்மா சமையலை புகழ்ந்து தான் மற்றவர்களிடம் சொல்வார்கள்.

பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

வாடகை வீடுகள் - 3

8 கருத்துகள்


வாடகை வீடுகள் - 3

வாடகை வீடுகள் முதல் பகுதியை காண:

வாடகை வீடுகள் - 1

வாடகை வீடுகள் இரண்டாம் பகுதியை காண:


வாடகை வீடுகள் - 2

ஒரு முறை எழுதிய வாடகை வீடுகள் -3 பகுதி தவறுதலா நீக்கிட்டேன்.


அது தான் கால தாமதம். 

ஒவ்வொரு முறையும் ரூம் மாறுவதற்கு படும் சிரமங்களும் இங்கு அதிகம். 

அதில் முக்கியமானது பாக் பண்ணுவது தான். பார்க்க கொஞ்சமாக இருப்பது போல முதலில் தோன்றும்.

அதற்கு அப்புறம் நிறைய சேர்ந்து விடும். இதற்காகவே வாங்குவதை குறைத்து கொண்டோம்.

சமையல் பொருட்கள் தான் அதிகம் சேர்ந்து விடுகிறது. 

சிலர் ஆட்கள் வைத்து பொருட்களை மூவ் பண்ணுவதும் உண்டு. 

சிங்கையை  பொருத்தவரையில் வீட்டு ஓனர்கள் போடும் கண்டிஷன்கள் அர்த்தமற்றவையாக தான் இருக்கும்.

1. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும். (ஆனால் ஓனர் மனைவி வீட்டில் தான் இருப்பார்)

2. குழந்தை இல்லாமல் இருந்தால் உடனே வீடு கிடைக்கும். (அப்போ தான் அவங்க வீட்டு குழந்தை ப்ரைவசியா விளையாடுமாம்).

அப்படி குழந்தை இருந்தாலும் அழ கூடாது. என்ன ஒரு கொடுமை பாருங்க.. 

இது என் கணவரின் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம். இதை சொல்லியே வீடு காலி செய்ய வைத்து விட்டார்கள்.

இதன் காரணமாகவே குழந்தையை இந்தியாவில் விட்டு விட்டு இங்கு பணிபுரியும் பெண்களும் உண்டு. என் பழைய அலுவலகத்தில் ஒரு பெண் அப்படி இருந்தார். பாவம் குழந்தையை நினைத்து கொண்டு இங்கு வாழ்க்கையை நடத்துவது சிரமம் தான்.

அவரும் நானும் உணவு இடைவேளைகளில் வீட்டு கதைகளை தான் பேசுவோம். அவர் சொல்வது இன்னும் கொடுமையாக தான் இருக்கும்.

செய்து வைத்த உணவு பாதி நாள் இருக்காது என்று சொல்வார். எனக்கும் ஒரு வீட்டில் இந்த அனுபவம் நிறைய உண்டு.

அவசரத்திற்கு உதவுமே என்று எப்பொழுதும்  ப்ரோசன் பரோட்டா பெரிய பாக்கெட் வாங்கி வைத்திருப்பேன். ஆனால் எனக்கு உதவியதோ இல்லையோ என் ஓனருக்கு நன்றாக உதவியது. எங்கள் செலவில் பல நாட்கள் டின்னர் முடித்து விடுவார்.

இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் எடுத்தால் சொல்லவே மாட்டார். திருப்பி வைக்கவும் மாட்டார்.

நாம் பரோட்டா தான் இருக்கிறதே அதை டின்னருக்கு சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்து வந்து பார்த்தால் இருக்காது.

இதை போய் கேட்பதா என்று நானும் நிறைய முறை விட்டு விட்டேன்.

ஒரு முறை பொறுக்க மாட்டாமல்  எடுத்தீர்களா   அக்கா என்று கேட்ட பொழுது ஆமாம் கொத்து பரோட்டா சாப்பிட வேண்டும் போல இருந்தது 6 தான் எடுத்தேன் என்று சொன்னார்.

அது போல் இந்தியா சென்று வரும் பொழுது கொண்டு வரும் புளி, மசாலா பாக்கெட்டுகள் கேட்காமலேயே எடுத்து கொள்வார். இப்படி நிறைய சொல்லலாம்.


இந்த தொல்லைகாகவே அடுத்த வீடு போயாச்சு.

வீட்டு ஓனர்கள் இப்படி செய்யறதுனால கடந்த இரண்டு வருடங்களா ஒரு முழு வீட்டையே வாடகைக்கு எடுக்கும் பழக்கம் இப்போ வந்துடுச்சு.

சிலர் முழு வீட்டை எடுத்து இரண்டு குடும்பங்கள் ஷேர் பண்ணிக்குறாங்க. 

உதாரணமா முழு வீடு 2,200 டாலர் கு எடுக்குறோம்னா மாஸ்டர் ரூம் எடுப்பவர்கள் 1200, காமன் ரூம் எடுப்பவர்கள் 1000 குடுக்கணும். எலெக்ட்ரிக் பில், கேஸ் தனியா வரும். கொஞ்சம் செலவு தான். ஆனால் நிம்மதியா இருக்கலாம். இப்போ இது தான் ட்ரெண்ட் இங்கே.

நான் ஒரு ஸ்டுடியோ டைப் ப்ளாட்ல 2 வருடம் இருந்தேன். ப்ரைவசியாகவும் இருந்தது. எந்த தொல்லையும் இல்லை. 

நமது நாட்டில் இருப்பவர்கள் அவங்களுக்கு என்ன வெளிநாட்டில் ஜாலியாக இருக்கிறார்கள் என்று நினைப்பதுண்டு. ஆனால் இங்கு படும் சிரமங்கள் நமக்கு தானே தெரியும்.


மூன்று பகுதிகளையும் பொறுமையாக படித்த நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி.


ப்ரோக்கோலி இறால் பொரியல்

4 கருத்துகள்


ப்ரோக்கோலி இறால் பொரியல்

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி  - 1
இறால் - 10
வெங்காயம் - 1
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.ப்ரோக்கோலியை மெல்லிய பூக்களாக நறுக்கி சுடு நீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இறாலை சேர்த்து சிறிது வதக்கி தூள் வகைகள் சேர்த்து பிரட்டி விடவும்.



4. பின்னர் ப்ரோக்கோலியை சேர்த்து ஒரு கை நீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.

4. 5 நிமிடத்தில் வெந்து விடும்.

சுலபமாக செய்ய கூடிய இறால் ப்ரோக்கோலி பொரியல் ரெடி.


* விரும்பினால் சிறிது தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes