கோதுமை ரவை பிரியாணி

2 கருத்துகள்


இது இணையத்தில் பார்த்து முயற்சித்த குறிப்பு தான். சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.....

கோதுமை ரவை பிரியாணி

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி  - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
குடைமிளகாய் - 1/2
காலிப்ளவர் - 1/2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லிதழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

பட்டை - 2 துண்டு
கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 1

செய்முறை :

1. கோதுமை ரவையை அலசி வைத்து கொள்ளவும். காய்கறிகளை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். காலிப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து சுடுநீரில் போட்டு வடிகட்டி  வைக்கவும். 

2. குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்துள்ளதை தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதங்கியதும் குடைமிளகாய், கேரட், காலிப்ளவர் சேர்க்கவும்.

4. பின்னர் தூள் வகைகள், தயிர் சேர்க்கவும்.  கோதுமை ரவையை சேர்த்து நன்கு மசாலாவில் சேரும்படி பிரட்டி விடவும்.

5. 2 கப் தண்ணீர் சேர்த்து எல்லாம் ஒரு சேர பிரட்டி விட்டு 1 விசில் வந்ததும் இறக்கி மல்லிதழை தூவி பரிமாறவும்.

வாசமான ஹெல்தி கோதுமை ரவை பிரியாணி தயார்.

காலை உணவிற்கு ஏற்றது. தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருந்தது.

உருளை மசாலா

4 கருத்துகள்


உருளை மசாலா

தேவையான பொருட்கள் :

உருளை - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை : 

1. உருளையை வேகவைத்து தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்      கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் , தக்காளி, பச்சை  மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.



4. பின்னர் உருளையை சேர்க்கவும்.


5. தூள் வகைகள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.


6. 1 கப் தண்ணீர் சேர்க்கவும்..மூடி போட்டு வேக விடவும்.


7.  எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.



சுவையான உருளை மசாலா தயார்.

பூரி, சப்பாத்திக்கு செய்ய ஏற்ற சைட்டிஷ்.

மல்லி புதினா பொடியாக நறுக்கி சேர்த்தால் மணமாக இருக்கும்.ஃப்ரோசன் பட்டாணி இருந்தால் 1/2 கப் சேர்க்கலாம்.
இவை இரண்டும் என்னிடம் அப்பொழுது இல்லை அதனால் சேர்க்கவில்லை.

டூனா மீன் மசாலா

2 கருத்துகள்


டூனா மீன் மசாலா 

தேவையான பொருட்கள் :

டூனா மீன் - 1 டின் 
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - 1/2
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். டூனா மீனை எண்ணெயை வடித்து விட்டு உதிர்த்து வைக்கவும்.



2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.


3. இஞ்சிபூண்டு சேர்த்து பச்சை வாசம் போக வதங்கியதும் தக்காளி,  குடைமிளகாய் சேர்க்கவும். தக்காளி குழைந்ததும் மீனை சேர்த்து பிரட்டி விடவும்.



4. பின்னர் தூள் வகைகள் சேர்க்கவும். மீன் வெந்து வரும் பொழுது கறிவேப்பிலை சேர்க்கவும்.


5. கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி கொத்தி விடவும்.




டூனா மீன் மசாலா  ரெடி.

சாண்ட்விச், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையான சைட்டிஷ்.



நான் இதில் சில்லி டூனா பயன்படுத்தி இருப்பதால் காரம் குறைவாக சேர்த்திருக்கிறேன் .

நீங்கள் உங்கள் சுவைக்கேற்ப காரத்தை அதிகரித்து கொள்ளலாம்.

வாடகை வீடுகள் - 2

4 கருத்துகள்


வாடகை வீடுகள் - 2

வாடகை வீடுகள் முதல் பகுதியை படிக்க லிங்க் இதோ : 

வாடகை வீடுகள் - 1

முதல் வீட்டை விட்டு காலி பண்ண சொன்னதும் நான் ரொம்பவே  கஷ்டப்பட்டேன்.

எப்படி அடுத்த வீடு பார்க்கிறது கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஒரே புலம்பல் தான்.

ஒரு நார்த்-இந்தியன் வீட்டில அடுத்ததா குடி போனோம். இவங்களும் ஆரம்பத்துல நல்லா  தான் இருந்தாங்க.

முதலில்அவங்க கொஞ்சம் கொஞ்சமா எல்லா வேலையும் செய்ய சொல்வாங்க. என்னவரை ஆபிஸ் அனுப்பிட்டு சும்மாவே நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த எனக்கு அதெல்லாம் கஷ்டமா இல்லை. நானும் சொன்னதெல்லாம் செஞ்சேன்.

நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் தான் ஒத்து வரலை. அப்போவும் அதே ரீதியில வேலை செய்ய சொன்னாங்க. அவங்க செய்யறதை கொஞ்சம் கூட மாத்திக்க மாட்டாங்க.

நான் ஆபிஸ் போயிட்டு வந்து வீட்டு கதவை திறந்ததுமே தினம் கம்ப்ளெயின்ட் தான். பெரிசா ஒன்னும் இருக்காது நீ குக் பண்ணின கடாயை எப்போவும் வைக்குற இடத்தில இருந்து என் இடம் கிட்ட வச்சுட்டன்னு சொல்வாங்க. எனக்காக அதே இடத்தில வச்சிருப்பாங்க வேற. நான் வந்தா காண்பிக்கனும்ல அதுக்கு!!!

இது மாதிரி தினம் ஒன்னு. ஆபிஸ் விட்டு அலுப்போட வீட்டுக்கு வரும் பொழுது தினம் ஒரு கம்ப்ளெயின்ட் சொன்னா கஷ்டமா இருக்கும். 

சில நேரம் எதற்கு இங்கே இருக்கணும் இந்தியா போயிடலாம்னு எல்லாம் யோசிச்சு இருக்கேன். கணவர் தான் ரொம்ப சமாதான படுத்துவார்.

என்னவர் தினம் 7.15 மணிக்கு ஆபிஸ் போவார். அதனால் நான் காலையில் சமைத்து குடுப்பேன்.

இவங்க ஒருமுறை என்னிடம் எனக்கு கைக்குழந்தை (2 வயது) வைத்து கொண்டு காலையில் எழ முடியவில்லை. நீ எனக்காக என் கணவருக்கு காபி போட்டு தர முடியுமான்னு கேட்டாங்க. நானும் இது என்ன பெரிய விஷயமான்னு சரி செய்றேன்னு சொன்னேன்.

1 வாரம் கழித்து அவருக்கு காபியுடன் எக் ஆம்லெட் போட்டு தந்துட முடியுமா? பாவம் 2 ஸ்லைஸ் ப்ரெட் சாப்பிடுவார்னு சொன்னதும் அதற்கும் சரின்னு செஞ்சேன்.

இது மாதக் கணக்குல தொடர்ந்தது. என்னவர் கூட கிண்டல் பண்ணுவார் எனக்கு கூட தினம் ஆம்லேட் போட்டு குடுக்க மாட்டேங்குற.

நானும் என் அண்ணனா இருந்தா செஞ்சு குடுப்பேன்ல அப்படி தான் செய்றேன்னு சொல்வேன்.

ஆனால் ஓனர் அதிலேயே குறை கண்டுபிடிக்க ஆரம்பிச்சதும் தான் எனக்கு டென்ஷன் ஆயிடுச்சு.

இனிமே கொஞ்சம் உப்பு அதிகமா போடு, காபி அதிகம் போடாதே  அரை கப் கரெக்டா போடு. 7.15குள்ள குடுத்துடுன்னு அதிகாரமா சொன்னதும் எனக்கு பிடிக்கலை.

அந்த டைம் என்னவர் ஆபிஸ் கிளம்பறதுக்கு லஞ்ச் பேக் பண்ணுற அவசரத்திலயும் செஞ்சு குடுத்தா இதில் குறை வேறயான்னு நான் சாரி இனிமே நீங்களே செஞ்சு குடுங்க எனக்கு ஹரிபரியா செய்ய முடியலைன்னு சொல்லிட்டேன்.

அது அவங்களுக்கு பெரிய விஷயமா போயி 1 வாரம் பேசாம இருந்தாங்க. இது ஒரு சாம்பிள் தான். இது மாதிரி பல விஷயம் நடந்திருக்கு :( 

இதை சொல்லியே ஆகணும். எனக்கு வார ஆரம்பத்துல ஆபிஸ்ல வேலை அதிகம் இருக்கும்ன்னு கண்டிப்பா தோசை மாவு ரெடி பண்ணி வச்சுடுவேன். 2 நாட்களுக்கு டின்னர் செய்ய ஈசியா இருக்கும்ல.

ஒரு சண்டே நைட் ரெடி பண்ணி புளிக்க வைக்கிறதுக்காக வெளில கிட்சென் மேடைல வச்சுட்டு தூங்க போயிட்டேன்.

காலைல வந்து பார்த்தா சின்க்ல என் மாவு பாக்ஸ் எம்டியா இருக்கு. மாவு எல்லாம் சுத்தமா இல்லை.

எனக்கு ஒண்ணுமே புரியலை. என்ன ஆச்சுன்னு இவங்க கிட்ட கேட்டா விழுந்து விழுந்து  சிரிக்குறாங்க. என் பையன் நைட் விளையாடும் பொழுது தட்டி விட்டு கொட்டிட்டான். நீ தூங்கியிருப்பன்னு எழுப்பாம  நானே கஷ்டப்பட்டு  கிளீன் பண்ணினேன். 

மாவு பாக்சை மட்டும் நீ கழுவிடுன்னு சிரிச்சுகிட்டே சொல்றாங்க. எனக்கு செம டென்ஷன். ஒரு சாரி சொல்லிருந்தா கூட பரவாயில்லை சின்ன பையன் தானே தெரியாம பண்ணிட்டான்னு விட்டுடலாம். இவங்க சிரிச்ச சிரிப்பிலேயே கோபம் வந்துடுச்சு.

நான் ஒண்ணுமே பேசாம ஆபிஸ் கிளம்பி போயிட்டேன். வேற என்ன பண்றது ???

இப்படி அடுக்கடுக்கான டார்ச்சர் குடுத்ததில 8 மாதம் வரைக்கும் ஓட்டினேன். அப்புறம் என்னவர் வேற ரூம் பார்த்துட்டு கிளம்புறோம்னு சொல்லிட்டார்.

அவங்க அதுக்கு அப்புறம் இருக்க சொல்லி எங்களை கேட்டதுக்கும் மறுத்துட்டு அடுத்த வீட்டுக்கு கிளம்பியாச்சு :)

மத்த வீட்டுகளோட அடுத்த பதிவில் தொடர்கிறேன் ...........

ராகி சேமியா உப்புமா

2 கருத்துகள்


ராகி சேமியா உப்புமா 

தேவையான பொருட்கள் :

ராகி சேமியா - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்
எண்ணெய் / நெய் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி, புதினா - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை : 

1. ராகி சேமியாவை ஒரு சட்டியில் 4 கப் தண்ணீருடன் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 3 நிமிடம் ஊற வைத்து ஸ்டீமரில் 5 நிமிடம் வேக வைத்து தட்டில் கொட்டி வைக்கவும்.


2. வெங்காயம், பச்சை மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3. பானில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலை பருப்பு தாளித்து வெங்காயம், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.

4. பின்னர் பச்சை மிளகாய், கேரட் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். மிளகு தூள் சேர்க்கவும்.

5. ராகி சேமியாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

6. 2 நிமிடம் கழித்து தேங்காய் துருவல், மல்லி புதினா சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.

சுவையான ராகி சேமியா உப்புமா தயார்.

புதினா துவையலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்தியாவில் இருந்தவரை வாரம் ஒருமுறை எங்கள் வீட்டில் காலை உணவு இது தான். இங்கு கணவருக்கு பிடிக்காததால் நான் அதிகம் செய்வதில்லை.

வாடகை வீடுகள்

2 கருத்துகள்


வாடகை வீடுகள் 

இதனை பற்றி பதிவு போடணும்னு ரொம்ப நாளா யோசிச்சு இப்போ தான் எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கு.

அது வேற ஒண்ணுமில்லை இந்த வார கடைசியில வீடு மாறுறோம்.தப்பு தப்பு... ரூம் மாறுறோம்.

எதை எதையோ எழுதுற இதை பத்தியும் எழுதுன்னு என் கணவர் சொன்னதும் ஒரு காரணம்.

சிங்கையை பொருத்தவரை இங்கு இருக்கும் வெளிநாட்டவர்கள் அதாவது இந்த நாட்டு குடியுரிமை பெறாதவங்க எல்லாரும்  இந்த பிரச்சனையை கண்டிப்பா சந்திச்சு இருப்பாங்க.

அதிலும் நான் கடந்த 4 வருஷங்களில் 6 வீடு மாறிட்டேன்.

இதுக்கு நான் தான் காரணமா இல்லை நான் போய்  தங்குற வீட்டு ஓனர்கள் தான் காரணமான்னு இன்னமும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

ஒவ்வொரு வீட்டிலும் தங்கினதையே ஒரு பதிவு போடலாம் (ஆஹா..இதுவே 4, 5 தொடர்பதிவு வரும் போல இருக்கே).


பயப்படாதீங்க... 2 அல்லது 3 பதிவா ஷார்ட் பண்ணிக்குறேன்.

சிங்கை வருவதற்கு 1 மாதம் முன்னாடியே என்னவர் வீடு தேட ஆரம்பிச்சுட்டார்.

அவர் தேடினா எப்பொழுதும் 2 வாரத்திலே கிடைக்கும். நான் கூட இருக்கும் பொழுது தேடினா தான் அமையாது.

ஆனால் அவர் தேடின வீட்டில 3 மாதம் தாக்கு பிடிக்கிறதே  கஷ்டம்.



அங்கு சென்ற பின்பு வீட்டு ஓனர் எதற்கு எடுத்தாலும் உங்க ஹஸ்பன்ட் எல்லாத்துக்கும் ஒக்கே சொன்னாரேன்னு தான் சொல்வாங்க.


இவர் கிட்ட கேட்டா சொன்னாங்களா, இல்லையான்னு தெரியலைன்னு சொல்லிடுவார். நம்ம பாடு தான் திண்டாட்டமா இருக்கும்.

இங்க ரூம் குடுப்பாங்க, கிட்சென் , டாய்லெட் யூஸ் பண்ணிக்கலாம்.வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் எல்லாம் ஷேரிங் தான்.

மாஸ்டர் ரூம் குடுத்தாங்கன்னா டாய்லட் அட்டாசிட்டா இருக்குறதுனால 150 - 200 டாலர் வாடகை அதிகம். ஏசி இருந்த இன்னும் 100 அதிகம்.
மெயின் ஏரியாவா இருந்தா 100 - 200 டாலர் அதிகம்.

நாங்க மோஸ்ட்லி மாஸ்டர் ரூம், ஏசி வேண்டாம்ன்னு சொல்லிடுவோம். ஆனால் மெயின் ஏரியாவில் தான் பார்ப்போம். ஆபிஸ்க்கு ட்ரைன் பிடிக்க அதுதான் வசதியா இருக்கும்.

எப்படியும் 800 - 850 ஆகிடும் வாடகை. இதுவே மாஸ்டர் ரூம், ஏசி எல்லாம் வேணும்னா 1000 தாண்டி தான் வரும்.

இப்போ ஓனர்கள் எல்லாம் ரேட்டை அதிகமாக ஏத்தி விட்டுட்டாங்க.

அவுட்டர்ல இருக்குற ஏரியால கூட காமன் ரூம் இப்போ 900 கேக்குறாங்க ஏசி இல்லாம.

என் தோழி எடுத்திருக்கிற மாஸ்டர் ரூம் ஏசி, இன்டர்நெட் வசதிகளோட 1300 வருது.

ஒக்கே. முதல் வீட்டு அனுபவத்தை சொல்றேன்.

4 வருஷத்திற்கு முன்னாடியே முதல் வீட்டிற்கு 850 குடுத்தோம். அப்போ அந்த வாடகை மிக அதிகம்னு தெரியலை.

நான் போன முதல் நாளே மதியம் லஞ்ச் எல்லாம் குடுத்தாங்க. 

எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கன்னு செம ஹாப்பி ஆயிட்டேன்.

ஓனர் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் நாங்கள் ரூமை விட்டு வர வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்க. உறவுக்காரங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமாம்.

அவங்க முகத்தில வாடகை பணம் குடுக்கும் பொழுது தான் சிரிப்பே வரும். மத்த நேரம் எல்லாம் ஹெட்மிஸ் மாதிரி தான் இருப்பாங்க.

முதல் வீட்டு ஓனர் நாங்க போய் 1 மாதத்திலேயே  இந்தியா  போயிட்டாங்க. அவங்க கணவர், மகள் மட்டும் வீட்டில இருந்தாங்க.

அப்பொழுது நான் வேலைக்கு செல்லவில்லை. அந்த பெண் வேலைக்கு செல்வதால் எல்லா வேலைகளும் நம்ம தலையில் தான்.
ஒரு வழியா கஷ்டப்பட்டு பழகி செஞ்சுட்டேன்.

அந்த பெண்ணிற்கு சமைக்க தெரிலைன்னு பாவப்பட்டு பாதி நாளுக்கு மேல நான் தான் இருவருக்கும் டின்னர் செஞ்சு குடுத்தேன்.

சாப்பாடு நல்லாயிருக்குன்னு  கூட சொல்ல மாட்டாங்க. 

3 மாதம் கழித்து வந்த ஓனர் எங்க அம்மா ஊரில இருந்து வர்றாங்க ரூம் தேவைபடுதுன்னு ஒரு வாரத்துல காலி பண்ணிடுங்கன்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் தான் தெரியுது இவங்க 3 மாதத்திற்கு வேலைக்கு ஆள் வைப்பதற்கு பதில் தான் வாடகைக்கு விட்டாங்கன்னு.

எனக்கு ஒரே அழுகையா வருது. 1 வாரத்தில வீடு கிடைக்குமா கிடைக்காதா என்று தூக்கமே இல்லை. ஒரு வழியா ஒரு ரூம் கண்டுபிடிச்சாச்சு.

அடுத்த ஓனர் பற்றிய கதைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.




ஸ்பைசி சிக்கன் மசாலா

0 கருத்துகள்


ஸ்பைசி சிக்கன் மசாலா 

தேவையான பொருட்கள் :

போன்லெஸ் சிக்கன் - 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 1
மல்லி, புதினா - சிறிது

செய்முறை : 

1. சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். கிழங்கை சதுரமாக நறுக்கி வைக்கவும்.

2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

3. இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் உருளைக்கிழங்கு, கோழியை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் வேக விடவும்.


4. பின்னர் தூள் வகைகள், தக்காளி விழுது சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேக விடவும்.



5. சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மல்லி, புதினா சேர்த்து  அணைக்கவும்.

ஸ்பைசி சிக்கன் மசாலா தயார்.


பரோட்டா, சப்பாத்தி வகைகளுக்கு ஏற்ற சைட்டிஷ்.

கிரேவி அதிகமாக வேண்டுமென்றால் இன்னும் இரண்டு தக்காளி சேர்த்து கொள்ளலாம்.

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes