தனிக்குடித்தனம்

4 கருத்துகள்



தனிக்குடித்தனம்

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு டாக் ஷோ (talk show) பார்த்தேன்.
சிலர் இந்த நிகழ்ச்சியை கூட பார்த்திருக்க கூடும்.தலைப்பு நன்றாக இருந்தால் நான் ரசித்து பார்ப்பது உண்டு.

இந்த முறை தலைப்பு தனிக்குடித்தனம் பற்றியது.

அதில் ஒரு பக்கம் கல்லூரி மாணவிகளும் மற்றொரு பக்கம் திருமண வயதில் பையன் இருக்கும் அம்மாக்களும் பங்கேற்றனர்.அம்மாக்கள் என்றால் அவர்களும் 45 வயது உடையவர்கள் தான்.சிலர் அழகாக சுடிதாரிலே கூட வந்திருந்தார்கள்.

எனது ஆதங்கம் என்னவென்றால் இக்கால பெண்கள் நடந்து கொள்ளும் முறை தான்.அனைத்து பெண்களும் கூட்டு குடும்பம் பெரிய சுமை என்றும் ப்ரைவசியே கிடைக்காது என்றுமே சொன்னார்கள்.

அதற்கு அவர்கள் உபயோகப்படுத்திய வார்த்தை முறைகள் தான் கேட்க சகிக்கவில்லை.மாமியார்களுக்கு வடித்து கொட்ட முடியாது,கூட்டம்,பட்டாளம்,கும்பல் என்று மிக அழகாக குடும்பத்தை வர்ணித்தார்கள்.
நிகழ்ச்சி நடத்துபவரே திகைக்கும் அளவில் தான் வார்த்தை பிரயோகம் எல்லாம்.
அதற்கு எதிரணியும் பதிலடி குடுத்தார்கள்.

யோசித்து பார்த்தால் இக்கால பெண்கள் சொன்ன எதுவுமே நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியபடாது.

முழுக்க முழுக்க திரைப்படங்களை பார்த்து மனதில் பொய்யான கற்பனைகளை வளர்த்து கொள்கிறார்கள் என்று அவர்கள் பேச்சிலே தெரிகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் தனிக்குடித்தனத்தை விரும்புவதற்க்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இதோ:

1. கணவனை பேர் சொல்லி உரிமையாக அழைக்க முடியாது.(அனைத்து பெண்களுமே அவன் இவன் என்று தான் சொன்னார்கள்)
2. மாமியார், மாமனார் எதிரில் காலை நீட்டி சோபாவில் படுக்க முடியாது.
3. காலையில் லேட்டாக தான் எழுவோம்.
4. எங்கள் சம்பளத்தை இஷ்டம் போல் தான் செலவு செய்வோம்.(கணவன் மனைவி இருவர் சம்பளத்தையும் சேர்த்து தான்)
5. ஆண் நண்பர்களை வீட்டிற்கு கூட்டி வர முடியாது.
6. பெண்ணுடைய பெற்றோர்கள் தங்க முடியாது.
இப்படி நீண்டது லிஸ்ட்.

அதில் அப்பாவி கணவர்கள் செய்ய வேண்டியது ஒரு லிஸ்ட்.

1. காலையில் ரொமான்ஸ்
2. சமையல்
3. ஆஃப்சிற்கு பிக்கப் டிராப்
4. வெள்ளிக்கிழமை மூவி
5. வீகெண்ட் டின்னர், பார்ட்டி,அவுட்டிங்
6. சர்ப்ரைஸ் கிஃப்ட்

இதில் மற்ற விஷயங்கள் கூட சரி தான்.ஆனால் சமையல், காலையில் ரொமான்ஸ் தான் இடிக்கிறது.

பொதுவாக இருவருமே வேலைக்கு செல்லும் போது காலை நேர பரபரப்பில் இதற்கெல்லாம் நேரம் கிடைக்குமா என்ன??

சமையலில் உதவுவார்களே தவிர எந்த கணவனும் முழு நேரம் மனைவியை உட்கார வைத்து சமைத்து தர முன் வர மாட்டார்கள்.

இந்த ஷோவை பார்த்தால் அதில் பேசிய பெண்களை கட்டி வைக்க பையனை பெற்ற அம்மாக்கள் ரொம்பவே யோசிப்பார்கள்.

பணி நிமித்தம் வெளிநாடுகளிலும் ,வெளியூர்களிலும் தனியாக இருப்பவர்களுக்கு தான் தெரியும் கூட்டு குடித்தனத்தின் அருமை.

தனியாக வாழும் அனைவரும் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலாவது வீட்டினரின் தேவையை உணர்வார்கள்.

குறிப்பாக பெரியவர்களை அவர்களின் வழிகாட்டுதல் இருந்தாலே நாம் நமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்லலாம்.

இதுவரையில் நானும் எனது கணவரும் ஊரில் உள்ள எங்களது பெற்றோரை ஆலோசிக்காமல் எந்த முக்கிய முடிவும் எடுக்க மாட்டோம்.

நமது கண்ணோட்டம் ஒரு மாதிரி என்றால் அவர்கள் அந்த விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள்.என்ன இருந்தாலும் அவர்கள் அனுபவம் மிகப் பெரிய பலமல்லவா..



ஒற்றை பிள்ளையாக வளர்ந்த நான் கூட்டு குடித்தனத்தில் திருமணம் செய்து வந்த பொழுது மிகவும் சந்தோஷப்பட்டேன்.இப்பொழுதும் வருட விடுமுறையை நினைத்து தான் மனம் ஏங்குகிறது.

கூட்டுகுடித்தனத்தை சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணினால் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

நமக்கு தேவைபடும் ப்ரைவசியும் அங்கு தானாக கிடைக்கும்.திருமணம் செய்ய போகும் பெண்கள் இதை யோசித்தால் நல்லது.

கேலாங் சிராய் - நோன்பு சந்தை

0 கருத்துகள்



கேலாங் சிராய் - நோன்பு சந்தை

இங்கு சிங்கையில் கேலாங் சிராய் என்ற இடம் மலாய் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி.அவர்களது உணவுகள், ஆடைகள் என எல்லாமே இங்கு விதவிதமாக இருக்கும்.

அதிலும் குறிப்பாக நோன்பு காலங்களில் இங்கு ஒரு மாதம் முழுவதும் ரோட்டை அடைத்த மாதிரி நோன்பு கடைகள் போடுவார்கள்.அதை பற்றியது தான் இந்த பதிவு..

2 வாரங்களாக இந்த பதிவை எழுத நினைத்து வேலை மிகுதியால் முடியவில்லை.

பெண்கள் தலைக்கு அணியும் பாஜிகுரோங் தூடோங் துண்டுகள் இங்கு ஏராளமாக கிடைக்கும்.முன்பு விலை மலிவாக இருக்கும் என்றார்கள்.இப்பொழுது இங்கும் அதிக விலை தான்.ஆனாலும் மக்கள் வாங்குவதை விடவில்லை..

பெருநாள் பண்டிகை அன்று மலாய் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே நிறத்தில் உடை அணிந்து செல்வது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.கைக்குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை ஒரே நிறத்தில் உடை அணிந்தால் அழகு தான் இல்லையா!!



உடைகளுக்கு அடுத்து கண்ணை கவர்வது ஹோம்மேட் குக்கீஸ் தான். இங்கு விஷேச சமயம் உறவினர்களை சந்திக்க செல்கையில் கண்டிப்பாக அவர்கள் இதை வாங்கி செல்வார்கள்.


நாங்கள் விரும்பி இங்கு செல்வது உணவுகளுக்காக தான்.ரம்லி பர்கர், சிக்கன் கெபாப் இரண்டும் எனக்கும் என்னவருக்கும் மிகவும் பிடித்தது.
ஒரு சில உணவு வகைகள் உங்கள் பார்வைக்கு. ( சில ஃபோட்டோ நெட்டில் சுட்டது தான் கூட்டத்தில் எடுக்க முடியவில்லை)





இங்கு ஹென்னா போடுவதும் தற்பொழுது ரொம்ப ஃபேமஸ்.எல்லாம் நம் இந்திய பெண்கள் தான் போடுகிறார்கள்.ஒரு கைக்கு சிம்பிளாக போட 10 டாலர் என்று செம வியாபாரம் இங்கு தான். சீன பெண்கள் அனைவர் கையிலும் நம் ஊர் ஹென்னா தான் என் அலுவலக தோழி உட்பட.


கம்பளம், திரைச்சீலை, வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், ஃபோன் கவர்கள், காலணி, கைப்பை வகைகள் என்று 100க்கும் மேற்பட்ட கடைகள் உண்டு.
மலாய் மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து போகிறார்கள்.
பல நாட்டிலிருந்தும் வியாபாரிகள் வந்து விற்பனை செய்கிறார்கள்.
அனைவருக்கும் சந்தோஷம் தரும் வகையில் இருக்கும் இந்த நோன்பு சந்தை.


கோதுமைரவை உப்புமா

0 கருத்துகள்



கோதுமைரவை உப்புமா

சாதாரண ரவையில் செய்யும் உப்புமாவை விட இது சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் :)

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்
வெங்காயம் - 1
பால் - 1/2 கப்
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
முந்திரி - 5
கறிவேப்பிலை - 1கொத்து
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் / நெய் - 1 கரண்டி

செய்முறை :

1.வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
2.பானில் எண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் கடுகு, வரமிளகாய், கடலைபருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்க்கவும்.



2. எல்லாம் பொன்னிறமாக வதங்கியதும் 1 கப் தண்ணீர்,1/2 கப் பால் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் ரவையை சேர்க்கவும்.




3. மூடி போட்டு நீர் வற்றும் வரை வேக விடவும்.



4. சூடான கோதுமைரவை உப்புமா தயார்.



சட்னி சாம்பாருடன் சாப்பிடலாம்.
இட்லி பொடி தூவி சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.


பெருநாள் நினைவுகள் - 2

2 கருத்துகள்





பெருநாள் நினைவுகள் - 2

தொழுகை , பசியாற எல்லாம் முடிந்து  சிறியவர்கள் நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு போக வேண்டும்.நாம் அணிந்த புதிய உடைகளை காண்பிப்பதற்கு.போகவில்லை என்றால் கோபித்து வேறு கொள்வார்கள்.பெருநாள் அன்று ஏன் வரவில்லையென !!


அங்கு பெருநாள் பணம் வேறு குடுப்பார்கள்.அப்பொழுது 10 ரூபாய்,20 ரூபாயே பெரிய காசு.இப்பொழுது 100, 200 ரூபாய்க்கு கூட அந்த அளவு மரியாதை இல்லை.

என் தாத்தாவிற்கு பிடிக்காது என நான் எவ்வளவு வற்புறுத்தினாலும் யார் வீட்டிலும் வாங்க மாட்டேன்.வீட்டில் அம்மா, பாட்டி, தாத்தாவிடம் மட்டும் தான் நம்ம கலெக்க்ஷன் எல்லாம்.

பெருநாள் தொழுகை,உணவு முடிந்த பின்னர் அடுத்து செல்வது பெருநாள் கொல்லைக்கு தான்.
இது கிராமத்தில் ரொம்ப ஃபேமஸ்.

எங்கள் பாட்டி ஊரில் 2, 3 இடங்களில் இது செய்வார்கள். எங்கள் தாத்தாவுடைய அப்பா வீட்டில் இது செய்வதால் நாங்கள் எப்பொழுதும் அங்கு தான் செல்வது.

எனது மாமாக்கள், சித்திகள் என்று உறவினர்களுடன் பொழுது சுவாரசியமாக போகும்.அக்கம் பக்கத்திலுள்ள பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வார்கள். 50 பேருக்கு மேலேயே வருவார்கள்.

அங்கு சாப்பிடவும் நிறைய திண்பண்டங்கள் விற்பார்கள்.உள்ளூரில் இருக்கும் பெண்கள் தான் செய்து விற்பது எல்லாம்..முழுக்க பெண்களும் குழந்தைகளும் இருக்கும் இடம் என்பதால் ஆண்களுக்கு அனுமதி இல்லை.மாமாக்கள் வந்து எங்களுக்கு ஆடுவதற்க்கு மரங்களில் ஊஞ்சல் கட்டி கொடுப்பதோடு சரி.பிறகு வர மாட்டார்கள்.

அந்த ஊஞ்சலில் இருபுறமும் பெண்கள் உந்த ஆடுவது பெரிய சுகம்.நான் உந்த எனது அம்மா, சித்திகள் அனுமதித்ததே இல்லை.நீ பேசாமல் உட்கார் என்று சொல்லி விடுவார்கள்.அதிலும் ஒரு சித்தி என்னை எப்பொழுதும் கயிறு கட்டும் பக்கத்தில் தான் உட்கார வைப்பார்.என் மேல் அவ்வளவு நம்பிக்கை.ஆனால் அவர் மட்டும் நாள் முழுவதும் ஆடுவார்..


அம்மா கூட வந்தால் திண்பண்டங்கள் சாப்பிட நிறைய தடைகள்.சர்பத் வேண்டாம் சளி பிடிக்கும் என்று  சொல்வார்கள்.அம்மா வராமல் நான் மட்டும் தோழிகளுடன் போனால் ஜாலியாக இருக்கும்..இஷ்டத்துக்கு சாப்பிடலாம்.இருட்டும் வரை ஊஞ்சல் ஆடிவிட்டு வரலாம்.

இப்பொழுது பெருநாள் அன்று தொழுகை சாப்பாடு முடிந்த பின்னர் நான் விரும்பி செய்வது தூங்குவது தான் :)

இரவு நேரங்களில் உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வதும் உண்டு.


சிறுவயது பெருநாள் கொண்டாட்டங்கள் தான் மனதிலே இன்றும் பசுமையாக நினைவுக்கு வருகிறது.அவற்றை நினைத்து பார்த்து மகிழ்வதும் சுகம்தானே.. 

முதல் பகுதியை படிக்க :


பெருநாள் நினைவுகள்

1 கருத்துகள்



பெருநாள் நினைவுகள்

எப்பொழுதும் பெருநாள் வந்தாலே சிறு வயதில் கழித்த பெருநாள் கொண்டாட்டங்கள் தான் நினைவுக்கு வரும்.

அப்பொழுது இருந்த கொண்டாட்டம், குதூகலமான மனநிலை தற்பொழுது இல்லை.இயந்திர வாழ்க்கையில் அதுவும் மாறித்தான் போகிறது அல்லது அந்தளவு சுவாரசியமின்மையும் காரணமாக இருக்கலாம்.

இங்கு சிங்கையில் பெருநாள் என்றால் காலையில் 8 அல்லது 8.30 பெருநாள் தொழுகை பள்ளியிவாசல்களில் நடைபெறும்.இங்கு 70% பள்ளிகளில் பெண்களுக்கான இடவசதியும் செய்து தரப்படுகிறது.

நான் இங்கு வந்தபிறகு தான் பெருநாள் தொழுகை பள்ளிகளில் தொழ ஆரம்பித்திருக்கிறேன்.இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இந்தியாவில் இருந்த வரை வீட்டில் தான் தொழுகை.அனைவருடன் சேர்ந்து தொழும் போது மிகவும் அருமையாக இருக்கிறது.எப்பொழுதும் கூட்டு ப்ரார்த்தனைக்கு பலன் அதிகம் அல்லவா..

நானும் அம்மாவும் அம்மா வழி தாத்தா வீட்டில் தான் அதிக வருடங்கள் தங்கியிருந்தோம்.அங்கு பெருநாளுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்னாடியே என் பாட்டிஉனக்கு ஸ்பெஷலாக என்ன செய்து தர வேண்டும் என்று கேட்பார்கள்.நானும் முடிந்த அளவு பொரித்த பராட்டா, ஜாலூர் பராட்டா என்று லிஸ்ட் குடுப்பேன்.நம்மிடம் கேட்டு செய்கிறார்களே என்று குஷியாக இருக்கும்.

எங்கள் ஊர் பக்கம் காலை பசியாற அதிகம் செய்வார்கள்.குறைந்தது 10 அல்லது 12 ஐட்டங்களாவது இருக்கும்.மதியம் சிம்பிளாக தான் செய்வார்கள்.காலை உணவு ஹெவியாக இருக்கும் என்பதால் யாரும் அதிகம் சாப்பிட மாட்டார்கள்.சிலர் மதிய உணவையே சாப்பிட மாட்டார்கள் என் அம்மா சின்னம்மா பாட்டி மாதிரி :)

காலை பசியாற பராட்டா, பொரிச்ச பராட்டா, ஜாலூர் பராட்டா, ஜாலூர், வட்டலாப்பம், இடியாப்பம், பராசப்பம், சமோசா, இட்லி, கடல்பாசி, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு என்று இருக்கும்.இது தான் எங்கள் பாட்டி வீடு பெருநாள் மெனு.

டைப்பண்ணும் போதே வாய் ஊறுகிறது.வெளிநாட்டில் இருந்து கொண்டு நினைத்து பார்த்து ஜொள்ளு விட தான் முடியும்.இங்கு நான்கு ஐட்டம் செய்தாலும் சாப்பிட ஆளில்லை.

நட்புகளுக்கு தனியாக உணவு அனுப்பி விடுவார்கள்.

வீட்டு வேலையாட்கள், ரெகுலராக வரும் மீன் விற்பவர்கள், காய்கறிகார அம்மா மற்றும் வீடு தேடி வரும் தெரிந்தவர்க்கு எல்லாம் பெருநாள் உணவும் பணமும் குடுப்பார்கள்.

பாட்டி வீட்டு பழக்கத்தில் அனைத்து ஐட்டங்களையும் பெருநாளை தொடர்ந்து வரும் வாரயிறுதிகளில் 2, 3 ஆக செய்து விடுவேன்.என்னவர் தான் இன்னும் உனக்கு பெருநாள் முடியவில்லையா என்று கேலி செய்வார்.

எனது மாமியார் வீட்டில் காலையில் அதிகம் செய்ய மாட்டார்கள்.4 அல்லது 5 வகை தான் இருக்கும்.மதியம் பெரிய அளவில் செய்வார்கள்.பிரியாணி, தால்ச்சா,சிக்கன் ப்ரை, புளிப்பு பச்சடி, இனிப்பு பச்சடி, முட்டை, தயிர் சட்னி, பிர்னி என்று அமர்க்களமாக இருக்கும்.நானும் இப்பொழுது இதை ஃபாலோ செய்ய ஆரம்பித்து விட்டேன்.அதில் எனது கணவருக்கும் மாமியாருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.என் மாமியார் என்னை மாதிரியே சிங்கையில் இருந்தாலும் செய்கிறாய் என்று சந்தோஷபடுவார்கள்.

பதிவு நீளமாக இருப்பதால் பெருநாள் கொல்லை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes